நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது.உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை அகற்றவும், அலுவலகப் பணிக்காக பயன்படுத்திய, தற்போதைக்கு பயனற்ற காகிதங்களை அகற்ற மாவட்ட ஆட்சியா் ச. உமா உத்தரவிட்டாா்.
அதுமட்டுமின்றி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலகங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தினாா்.அதன்படி, கடந்த ஒரு வாரமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த காகிதக் கழிவுகள், பயன்பாடற்ற இரும்பு, நெகிழிப் பொருள்கள் அகற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த வகையில் ரூ. 6 லட்சம் கிடைத்துள்ளதாகவும், மாவட்ட கருவூலத்தில் அந்த தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.