நாமக்கல்லில் மோகனூர் சாலையில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது பழைய கட்டடத்தில் சித்த மருத்துவ பிரிவு, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் மட்டுமே இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், நாமக்கல்லில் அரசு சித்த மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சியை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் மேற்கொண்டார். இதையடுத்து, தமிழக அரசு அனுமதியுடன் தன்னுடைய தொகுதி நிதியில் இருந்து ரூ. ஒரு கோடி வழங்கினார். அதைக் கொண்டு, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களில் மூன்று பெரிய அறைகள் சித்த மருத்துவமனைக்காக தயார் செய்யப்பட்டன.
அதில் 60 படுக்கைகளுடன் சித்த மருத்துவமனையும், 50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனையும் (ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவம்) அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, நீராவி குளியல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த மருத்துவமனையில் இடம் பெறவுள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் சித்த மருத்துவமனை வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில், அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர வாய்ப்புள்ளது.