நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் புதைசாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாமக்கல் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் து. கலாநிதி தலைமையில் மன்றக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயர் செ. பூபதி, ஆணையர் ரா. மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலர்களிடம் தகராறில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 11-ஆவது வார்டு உறுப்பினர் டி.டி. சரவணன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஆணையர், 'துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் அளித்த புகாரின்பேரில், நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இரண்டு தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது' என்றார். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளில் உள்ள பிரச்னைகளை எடுத்துரைத்தனர். அதன்பிறகு, அனைத்து மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் மன்றக் கூட்டத்தில் 219 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.