நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவு மற்றும் அதிகாலையில் கடும் குளிரும் நிலவி வருகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இடங்களில் அவ்வப்போது காட்டுத் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. கோடை காலம் துவங்கும் முன்னரே மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் செடி கொடிகள் காய்ந்து சருகாக மாறி உள்ளது. இந்நிலையில் நேற்று காலை குன்னூர் அருகே உள்ள கம்பைச் சோலை பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த தீயில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள், செடி கொடிகள் எரிந்து நாசமானது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் போராடி இலை, செடிகளை வைத்தும், தண்ணீர் பாய்ச்சியும் காட்டுத் தீ விபத்தை கட்டுப்படுத்தினர். இவ்வாறு மாலை வேளையில் மழை பெய்ததால், காட்டு தீ பரவும் நிலை நின்றுள்ளது.