நீலகிரி மாவட்டம் ஊட்டி, மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் டிசம்பர் முதல் தொடங்கிய உறைபனி பிப்ரவரி மாதத்திலும் நீடித்து வருகிறது. ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைக்குந்தா, அவலாஞ்சி போன்ற இடங்களில் புற்கள், இலைகள், வாகனங்கள் மீது உறைபனி படர்ந்துள்ளது. பொதுவாக பிப்ரவரியில் உறைபனி குறையும் நிலையில், இம்முறை கடுங்குளிர் தொடர்வதால் மக்களின் அன்றாட வாழ்வில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குளிரை சமாளிக்க மக்கள் தீ மூட்டி குளிர்காய்கின்றனர். நகரப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3°C ஆகவும், தலைக்குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் 0°C வரையிலும் பதிவாகியுள்ளது.