தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள், தங்களது 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அங்கீகரிக்கக் கோரி நேற்று ஊட்டியில் கருப்பு துணி கட்டி ஒப்பாரி வைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் குணபாண்டியன், மாவட்ட துணை தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில பொதுச்செயலாளர் முத்துகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும், 60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என 200-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அமைத்து தனியார் வசூல் வேட்டையில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.