ஊட்டி: பெண்ணை படுகொலை செய்த புலி -டிரோன் மூலம் தீவிர தேடுதல்

2பார்த்தது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலமான மசினகுடி மாவனல்லா பகுதியில், மாடுகளை மேய்க்கச் சென்ற நாகியம்மாள் (69) மீது புதர் மறைவில் இருந்து புலி தாக்கியது. ஆற்று கால்வாய் அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அவரை புலி கடித்து இழுத்துச் சென்றது. தகவல் கிடைத்ததும் வனத்துறையினர், போலீசார் தேடுதல் நடத்தி, கால்வாய் கரையோர புதரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நாகியம்மாளின் உடலை மீட்டனர். உடல் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்ணை பலிகொண்ட புலி மீண்டும் மனிதர்களை தாக்கக் கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், புலிகள் காப்பக இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவின்பேரில் துணை இயக்குநர் கணேசன் தலைமையில் மாவனல்லா பகுதியில் 24 இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதுமலை தெப்பக்காட்டில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட புலியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வனத்துறை மற்றும் போலீசார் இணைந்து டிரோன் மூலம் புலியை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.