நீலகிரி: இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம்

63பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டுள்ள மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டு எருமை, மான் போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும். சமீப காலமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டபெட்டு குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வழக்கமாகி உள்ளது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுச் செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் சிறுத்தை உலா வந்த காட்சி அப்பகுதியில் ஒருவரின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.