கூடலூர் வன கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 14 வகையான நீர்வாழ் பறவைகள் மற்றும் 148 வகையான நிலவாழ் பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை காட்டுகிறது. கூடலூர் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டனர். நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு 20 நீர் நிலைகளிலும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு 23 இடங்களிலும் நடத்தப்பட்டது.
கணக்கெடுப்பின்போது வேதிவால் குருவி, மரங்கொத்தி, மயில், மாடப்புறா, செம்புத்து, ஊதா தேன் சிட்டு, கொண்டை வளர்த்தான், உண்ணி கொக்கு, வெண் மார்பு மீன் கொத்தி, சாம்பல் இருவாச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் காணப்பட்டன. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், இந்த கணக்கெடுப்பில் 14 வகையான நீர்வாழ் பறவை இனங்களில் 135 எண்ணிக்கையிலும், 148 நிலவாழ் பறவை இனங்களில் 3,023 எண்ணிக்கையிலும் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.