நீலகிரி மாவட்டத்தில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 'தன்னிறைவிற்கான கருவிகளாக கூட்டுறவு சங்கங்கள்' என்ற மையக் கருத்துடன் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பவ்யா, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு விழாவைத் துவக்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் சித்ரா தலைமையில் கூட்டுறவு கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி, விற்பனை சங்கம் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கொடியேற்றம், மரக்கன்று நடவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து, சதுரங்கம், ஆண்களுக்கான கிரிக்கெட், வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.