குன்னூர்: பள்ளியில் கரடி தொல்லைக்கு முற்றுப்புள்ளி

54பார்த்தது
குன்னூர்: பள்ளியில் கரடி தொல்லைக்கு முற்றுப்புள்ளி
டென்ட்ஹில் பகுதியில் உள்ள அரசு பள்ளியை இரவில் தொடர்ந்து வந்து சேதப்படுத்தி வந்த கரடிக்கு வனத்துறையினர் தீர்வு கண்டுள்ளனர். 

சமீப காலமாக, குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, டென்ட்ஹில் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப் பள்ளியின் சத்துணவு மையங்களில் இரவில் கரடி புகுந்து எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை சேதப்படுத்தி வந்தது. 

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், வனத்துறையினர் பள்ளி வளாகத்தில் சோலார் மூலம் இயங்கும் ஒலி எழுப்பும் தானியங்கி கருவியை பொருத்தியுள்ளனர். இந்த கருவி, இரவு நேரத்தில் இயங்கி, கரடி அருகில் வந்தவுடன் சென்சார் மூலம் ஒலி எழுப்பி கரடியை விரட்டும். மேலும், கேமரா பொருத்தி மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும். 

இதுகுறித்து நேற்று (ஜனவரி 1) பேசிய மாவட்ட வன அலுவலர் கவுதம், இந்த கருவி மூலம் கிராமங்களில் நுழையும் வன விலங்குகளை விரட்டி, மனித-விலங்கு மோதலை தவிர்க்க முடியும் என்றார். இந்த நடவடிக்கை, குன்னூர் பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி