கோத்தகிரி அருகே உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியால் ஒரு கடமான் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தது. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் பருக வந்த 4 கடமான்களில் 3 கடமான்கள் தாழ்வான பகுதி வழியாக மின்வேலியை தாண்டி சென்றாலும், ஒரு கடமான் மட்டும் தோட்டத்திலேயே சிக்கியது. பின்னர் அது வந்த வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியது. இந்த நிகழ்வை நேற்று பார்த்த வாகன ஓட்டிகள் வீடியோ, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். மின்வேலிகள் வனவிலங்குகளுக்கு அபாயம் ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை கண்டறிந்து அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.