ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு 30 ஆயிரம் ரோஜா செடிகளில் கவாத்து செய்யும் பணி நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அவர்களால் நேற்று தொடங்கப்பட்டது. 1995-ல் தொடங்கப்பட்ட இந்த பூங்கா உலகளவில் சிறந்த ரோஜா பூங்கா விருதைப் பெற்றுள்ளது. ஏப்ரல்-மே கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது 32,800 செடிகளில் 30,000 செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு, இயற்கை உரம் இடுதல், மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. கவாத்து மூலம் அதிக மலர்கள் பூக்கும் என்றும், ஏப்ரல் மாதத்தில் பூங்கா முழுவதும் ரோஜாக்கள் மலர்ந்து காட்சியளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 21-வது ரோஜா கண்காட்சிக்காக 2½ லட்சம் மலர்களால் அலங்காரம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.