ஊட்டியில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்ச்சியாக வாழ்த்து குறுஞ்செய்திகள், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பிய நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக உதவியாளர் முருகன் (45) நேற்று கைது செய்யப்பட்டார். விருதுநகர் சாத்தூரைச் சேர்ந்த முருகன், பயணச் செலவு தொடர்பான விண்ணப்பத்தில் இருந்து பெண் இன்ஸ்பெக்டரின் எண்ணைப் பெற்று குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் ஊட்டி ஊரக போலீஸ் இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தது. மேலும், இதுபோல் வேறு யாருக்காவது ஆபாச தகவல்கள் அனுப்பியுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.