பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய (பொறுப்பு) இந்திரானி ஆலோசனையின்படி, குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (ஜூன் 11) நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமாகிய சரண்யா குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் பெற்றோர்களிடமோ, பள்ளி நிர்வாகத்திடமோ அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் தெரிவிக்கலாம் என்றும் பயம் இல்லாமல் துணிந்து புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும் என்றும், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிப்பதை பற்றியும் எடுத்துரைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட பாதுகாப்பு உதவி வழக்கறிஞர்கள் ரோகினி, யாழினி மற்றும் சமூக நலத்துறை ஊழியர் ரேகா ஆகியோர் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர்.