பெரம்பலூர் அருகேயுள்ள அயிலூரைச் சேர்ந்தவர் செல்வகுமாரி (38). இவரை, இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத 2 பேர், டிரேடிங் மூலம் லாபம் ஈட்டித் தருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து செல்வகுமாரி, அவர்களது வங்கிக் கணக்கில் ரூ. 63,87,620-ஐ செலுத்தியுள்ளார்.
பின்னர், பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் செல்வக்குமாரியை பின்னர் தொடர்புகொள்ளவில்லையாம். இதையடுத்து, செல்வகுமாரி கடந்த ஜூலை 2-ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு(சைபர் கிரைம்) காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், கடந்த 18-ஆம் தேதி குஜராத் மாநிலத்துக்குச் சென்றனர். இதையடுத்து, குஜராத் மாநிலம், வடோதரா மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்மா ரகுநாத் பிரசாத் மகன்கள் ஷர்மா சுனில்குமார், ஷர்மா பன்சிலால் ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் 4 கைப்பேசிகள், 7 ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். பின்னர், வேப்பந்தட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஷர்மா சுனில்குமார் மற்றும் ஷர்மா பன்சிலால் ஆகியோரை சிறையில் அடைத்தனர்.