பெரம்பலூர்: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

61பார்த்தது
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், மாசி மகம் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான மாசி மகம் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் சுவாமி சிம்ம வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. 

இதில், கோவிலில் ஸ்ரீ ஆனந்தவல்லி, சமேத சந்திரசேகர் சுவாமி சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்குப் பின் கோவிலிலிருந்து புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன் திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது. 

இதில் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை ஆகியோர் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்து திருத்தேரை இழுத்துச் சென்றனர். இதில் சிவபக்தர்கள் வார வழிபாட்டுக் குழுவினர் சிவபுராணம், திருவாசகம், பாராயணம் செய்தனர். முக்கிய வீதி வழியாக சென்ற தேரோட்டத்தில், ஆங்காங்கே பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி