பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜூன் 14 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் இரத்தினவேல், மற்றும் கலையரசன் தலைமையில் நேற்று (30.7.2025) நடைபெற்றது.
இதில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், விசிக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பாதுகாப்போம், வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பேரேடு ஆகியவற்றைத் தயாரிப்பதைக் கைவிட வேண்டும், மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.