பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படுவதை தொடர்ந்து மாணவர்களுக்கு பூக்கள் மற்றும் இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்களும் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் ஜூன் 2ஆம் தேதியான இன்று ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் துவங்கப்படுகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் மற்றும் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
இவர்களில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சில தினங்கள் கழித்து பள்ளிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களை பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்றனர். மேலும் வாகனங்களிலும் மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்தனர்.
பெரும்பாலான பள்ளிகளில் முதல் நாள் பள்ளிக்கு வரும் புதுமுக எல்.கே.ஜி., யு.கே.ஜி, ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு உள்ளிட்ட ஏனைய வகுப்பு மாணவர்களுக்கு பூங்கொத்துகள் கொடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.