புதுச்சேரியில் 51-ஆவது மாநில அளவிலான கபடி போட்டி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 76 அணிகள் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் திருபுவனை வேலழகன் அணியும், மங்கலம் சங்கர் பிரண்ட்ஸ் அணியும் மோதின.
இறுதிப்போட்டியை முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்து போட்டியை கண்டு ரசித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் திருபுவனை வேலழகன் அணி 41-13 என்ற செட் கணக்கில் மங்கலம் சங்கர் பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி முதலிடம் பிடித்த திருபுவனை வேலழகன் அணிக்கு பரிசுகோப்பையையும், 50,000 ரூபாய் ரொக்கப்பரிசையும் வழங்கி பாராட்டினார். இரண்டாம் இடத்தைப் பிடித்த மங்கலம் சங்கர் பிரண்ட்ஸ் அணிக்கு பரிசுகோப்பை மற்றும் 25,000 ரூபாய் ரொக்கப்பரிசும், அதேபோல் மூன்றாம் இடம் பிடித்த சாய்ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு பரிசுகோப்பை மற்றும் 20,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நான்காவது இடம் பிடித்த ஓய்எல்சி அணிக்கு பரிசுகோப்பை வழங்கப்பட்டது.