புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். அதே போல், இந்த ஆண்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இதில் 1927ம் ஆண்டு ஆஸ்டின், 1933 டாட்ஜ், 1935 மோரிஸ், 1936 ஜாக்வார், 1946 சிட்ரன், 1947 சிங்கர், 1966 விடபல்யூ பீட்டில், 1967 பேர்ட் முஸ்டாங், மோரிஸ் மைனர்-1000, 1954 பென்ஸ் உள்ளிட்ட பாரம்பரிய கார்களும், 5-க்கும் மேற்பட்ட பாரம்பரிய பைக்குகளும் இடம்பெற்றன.
இந்த அணிவகுப்பில் சென்னை, புதுச்சேரியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கார்களும் மற்றும் 5-க்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகளும் இடம்பெற்றன. அந்த கார்களில் காரின் உரிமையாளர், தயாரிக்கப்பட்ட ஆண்டு போன்ற விவரங்கள் காரின் முகப்பில் வைக்கப்பட்டிருந்தன. இந்த கார்கள் அனைத்தும் கடற்கரை சாலையில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடற்கரையில் அணிவகுத்த பழமையான கார்களை கடற்கரைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் அந்த கார்களின் அருகில் நின்றும், தங்கள் குழந்தைகளை அமர வைத்தும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்தனர்.