ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் ஒன்றியம் திருக்கொள்ளூர் ஆதிநாகநாதர் சுவாமி கோவில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இங்கு மூலவர் ஆதிநாகநாதர் இன்றுவரை புற்றுமணலிலேயே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் இங்கு உள்ள புற்றுமணலை பிரசாதமாக பெற்றுச் சென்றால் வேண்டிய வரங்கள் உடனடியாக கிடைக்கும் என்பது கோயிலின் தனிச்சிறப்பாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டு இக்கோவிலின் வைகாசி வசந்த விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வலம்வந்து அருள்பாலித்தார். இந்நிலையில் இன்று மாலை ஆறுமணிக்கு கோவிலின் அருகில் அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டு அக்னிகுண்டத்திற்கு சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டு காப்புகட்டி விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் பூக்குழியிறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து ஆதிநாகநாதருக்கு சிறப்பு அபிஷேகஆராதனைகளும் நடைபெற்றது. இவ்விழாவைக்காண சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஆதிநாகநாதர் அருள்பெற்றுச்சென்றனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.