ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 7 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 கிலோ ஏலக்காயை உளவுத்துறையினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப்பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, உளவுத்துறையினர் தங்கச்சிமடம் அய்யன்தோப்புப்பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டின் அருகே சோதனையிட்டனர். அப்போது, அங்கு 7 சாக்கு மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை உளவுத்துறையினர் பறிமுதல் செய்து, தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம். இதுகுறித்து தங்கச்சிமடம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான சுரேஷை தேடிவருகின்றனர்.