ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியர்களுடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் முக்கியப் பிரமுகர்களும், உள்ளூர் பொது மக்களும் தரிசனம் செய்வதற்கு தனி வழி உள்ளது. அண்மையில் இந்தப் பாதையில் உள்ளூர் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த புதுமண ஜோடிக்கு கோயிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர், அந்த தம்பதி தங்கள் உறவினர்களுடன் உள்ளூர் பொதுமக்கள் தரிசனப் பாதையில் கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது, அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியர்கள் தம்பதியை தடுத்து நிறுத்தினர். இதனால், திருமண ஜோடியுடன் வந்தவர்களுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த உள்ளூர் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, தம்பதியுடன் இருவர் மட்டும் அந்தப் பாதையில் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதித்தது. மற்றவர்கள் மாற்று வழியில் சென்றனர். இந்தப் பிரச்னையில் கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து வருகிற 17-ஆம் தேதி கோயிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தப் போவதாக உள்ளூர் பொதுமக்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.