இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மூழ்கடிக்கவிருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகளுடன் மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடித்து வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை நீதிமன்றத்தால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது விசைப்படகுகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கை யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருக்கும் தமிழக விசைப்படகுகள் 123 உள்ளன. இந்த படகுகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இலங்கை மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் படகுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த இரண்டு துறைமுகங்களில் சேதமடைந்துள்ள 123 விசைப்படகுகளையும் மீன் வளர்ச்சிக்காக கடலில் மூழ்கடிக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் மூழ்கடிக்கும் இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு மீனவ சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.