ராமேசுவரம் - கோவை வாராந்திர விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் சாமி. திராவிடமணி, செயலர் எஸ். கண்ணப்பன் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ராமேசுவரத்திலிருந்து காரைக்குடி, திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக கோயம்புத்தூருக்கு வாரம் ஒரு நாள் சென்று, மறுநாள் திரும்பும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், கல்லூரி மாணவர்கள் பலரும் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்று தொழில் வணிகக் கழகமும், ரயில் பயணிகள் நலச் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மதுரை வழித்தடத்தில் கோயம்புத்தூருக்கு பல ரயில்கள் இயங்கி வருகின்றன. எனவே, ராமேசுவரம் - கோவை வாராந்திர விரைவு ரயிலை (வண்டி எண்: 16617/ 16618) எப்போதும் செல்லும் வழித்தடத்தில் தினசரி விரைவு ரயிலாக இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.