ராமநாதபுரம்: பேருந்துக்கு பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்து, ஆரத்தி

76பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மறவாய்க்குடி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இருந்ததில்லை. 

இவர்கள் முதுகுளத்தூர் அல்லது சிக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமெனில் தங்களது கிராமத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று முதுகுளத்தூர் to சிக்கல் சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தங்கள் ஊருக்கு பேருந்து வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் தங்கள் ஊரின் வழியாக முதுகுளத்தூர் சென்று வர பேருந்து ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். 

அதன்படி அமைச்சர் கோரிக்கையை பரிசீலித்து இன்று முதுகுளத்தூரிலிருந்து மறவாய்க்குடி சென்று பின்னர் சிக்கல் வழியாக சென்று அதே வழியில் மீண்டும் செல்லும்படி புதிய வழித்தடம் (பெண்களுக்கு இலவசம்) தொடங்கப்பட்டது. இதனை ஒட்டி மறவாய்க்குடி கிராம மக்கள் நீண்ட காலத்திற்கு பின் வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து நடத்தினர் மற்றும் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து குலவை இட்டு, மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி