சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடுகத்தம்பட்டியில் பாமக நிர்வாகி இல்ல துக்க நிகழ்வுக்கு சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றபோது, அன்புமணி தரப்பைச் சேர்ந்தவர்கள் காரை வழிமறித்து கல், உருட்டு கட்டை, இரும்பு கம்பி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அருளோடு வந்த நடராஜன் உட்பட எட்டு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடராஜன் அளித்த புகாரின் பேரில், அன்புமணி ஆதரவாளர்களான ஜெயபிரகாஷ், சங்கர், தினேஷ், சடையப்பன், செந்தில்குமார் உட்பட 20 பேர் மீது கொலை முயற்சி, பொது சொத்து சேதம், ஆயுதங்களுடன் தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அன்புமணி ஆதரவாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.