சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பூலாம்பட்டி பேரூராட்சியில் பஸ் நிலையத்தில் இருந்து பில்லுக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள தென்னை மரம் மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது இதனால் மின்சாரம் தடைப்பட்டது. இதேபோல் காட்டூர், காசிக்காட்டூர், பில்லுக்குறிச்சி, சவரி ரெட்டியூர், உள்ளிட்ட பகுதிகளில் மழையின் போது வீசிய சூறாவளி காற்றுக்கு குலை தள்ளிய நிலையில் இருந்த மூவாயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. மேலும் பல்வேறு இடங்களில் நெற்கதிர், செங்கரும்பு ஆகியவை காற்றுக்கு சாய்ந்தது. இது குறித்து விவசாயிகள் கூறும் போது வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து உள்ளது. வேளாண்மை மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி பெற்றுத்தர வேண்டும் என்று கூறினர்.