சேலம்: 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

61பார்த்தது
சேலம்: 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
நாகர்கோவிலை சேர்ந்தவர் பிரான்சிஸ் ஆண்டனி (வயது 54). ஆசிரியர். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரான நாகர்கோவிலில் வசித்து வருகிறார்கள். எனவே பிரான்சிஸ் ஆண்டனி சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். 

இவர் கடந்த 18 ஆண்டுகளாக கொங்கணாபுரம் அருகே செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் பிரான்சிஸ் ஆண்டனி அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது மாணவிக்கு உணவு இடைவேளையின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறி அழுதுள்ளாள். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் செந்தில் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் உள்ளிட்ட குழுவினர் ஆசிரியர் பிரான்சிஸ் ஆண்டனியிடம் விசாரணை நடத்தினர். 

இதில் அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் பிரான்சிஸ் ஆண்டனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி