சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நேற்று, வருடந்தோறும் ஆறுமுறை நடக்கும் நடராஜர் அபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், நடராஜருக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிவனடியார் ஜெகன் திருமூலர் நாயனார் குறித்து சிறப்புரையாற்றினார். பக்தர்கள் நடராஜர் பாடல்களைப் பாடி, பிரசாதங்கள் பெற்றுக்கொண்டனர். தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர்.