தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுகிறார். முதல்வர் வருகையையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று மேட்டூர் அணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அணையின் பாதுகாப்பு நடவடிக்கைகள், தண்ணீர் திறப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அணையின் நீர் இருப்பு, அணைக்கு வரும் நீர் வரத்து குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கேட்டு அறிந்தார். அப்போது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், மேட்டூர் நீர்வளத்துறை அதிகாரிகள் வெங்கடாசலம், செல்வராஜ், சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.