சேலம் மாவட்டம் மேட்டூர் கெம்பிளாஸ்ட் சன்மார் தொழிற்சாலையில் முதலாவது பிரிவில் குளிர்பான வாயு உற்பத்தி செய்வது மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து சேலம் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் மேட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் விஜய் உதயகுமார், மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் பேசும்போது, 'மேட்டூர் தொகுதியில் உள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனம் விரிவாக்கத்திற்கு ஆட்சேபனை இல்லை. ஏற்கனவே மேட்டூரில் இருந்த பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேட்டூர் மக்கள் வேலைவாய்ப்பு தேடி வெளியூர் செல்கிறார்கள். வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். விரிவாக்கம் செய்யப்படும் இந்த தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு வழங்கும்போது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்' என்றார். டெல்லி மேல்சபை எம்.பி. சந்திரசேகரன், முன்னாள் எம்.பி. பார்த்திபன் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.