231 நாளில் 100 அடிக்கும் மேல் இருக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

70பார்த்தது
231 நாளில் 100 அடிக்கும் மேல் இருக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அணையில் நீர் இருப்பு போதிய அளவில் இல்லாததால் ஜூலை மாதம் 28ஆம் தேதி அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அவ்வப்போது பாசன பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டது. 

இருப்பினும் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுவந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியாக குறைந்தது. இந்த நிலையில் டெல்டா பாசன பகுதியில் மழை பெய்ததன் காரணமாக பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வதும், குறைவதுமாக இருந்தது. இவ்வாறு உயர்ந்த நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறையாமல் நேற்று வரை நீடித்து வருகிறது. அதாவது மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 231 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி