சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறக்க முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் மேட்டூர் வந்தார். அப்போது அவரிடம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு குள்ளவீரன்பட்டி, 8-வது வார்டு தங்கமாபுரிபட்டணம் பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. சாலை வசதி இல்லை என பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சர் ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி எம்.பி. ஆகியோர் நேற்று மேட்டூர் வந்தனர். அவர்கள் தங்கமாபுரிபட்டணம் மற்றும் குள்ளவீரன்பட்டி பகுதி பொதுமக்களை சந்தித்து குறைகள் குறித்து கேட்டறிந்தனர். அவர்கள் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. சாலை வசதி இல்லை என தெரிவித்தனர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் நித்யா, நகராட்சி துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் உடன் சென்றனர்.