சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தமிழக எல்லையில் காரைக்காடு பகுதியில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியானது, கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்கள், கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக காவல் துறையால் அமைக்கப்பட்டது. இங்கு மதுவிலக்கு போலீசார், மதுபானங்கள் கடத்தலை தடுக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகள் சொகுசு பஸ் ஒன்றில் தென் மாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா வந்தனர்.
இவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு செல்வதற்காக மேட்டூர் அருகே காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி பகுதிக்கு நேற்று வந்தனர். இதையடுத்து சோதனை சாவடியில் பணியில் இருந்த மதுவிலக்கு போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரன், தமிழரசன் ஆகியோர் இந்த சொகுசு பஸ்சின் பெர்மிட் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டனர். அப்போது அந்த பஸ் டிரைவருக்கும், போலீஸ் ஏட்டுகள் செந்தில், சுகவனேஸ்வரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் வண்டியில் இருந்த இரும்புகம்பியை எடுத்து போலீஸ் ஏட்டுகளை தாக்கினார். அவருக்கு ஆதரவாக பஸ்சில் இருந்த பயணிகளும் அங்கு வந்து சோதனை சாவடி போலீசாரை தாக்கினர். இதில் செந்தில், சுகவனேஸ்வரன் ஆகிய 2 போலீஸ் ஏட்டுகளும் காயம் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.