மேட்டூர் எம். எல். ஏ. சதாசிவம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -மேட்டூர் பகுதியில் கழிவுகள் காவிரி ஆற்றில் கலந்து தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு அளித்தும் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலாற்றில் கழிவுகளை கலக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றில் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றை காப்பாற்ற வேண்டும்.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய கழிவு காவிரி ஆற்றில் கலந்து தண்ணீர் மாசு அடைந்துள்ளது. இதனால் காவிரி நீர் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதற்கு பதில் அளிக்கவில்லை. மேட்டூர் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாத இடங்களில் கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த கழிவுகள் கலப்பதை தடுக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டசபை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.