ஒமலூர்: டாஸ்மாக்கில் பாஜக - திமுக மோதல்

66பார்த்தது
ஒமலூர்: டாஸ்மாக்கில் பாஜக - திமுக மோதல்
ஓமலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் முதல்வர் உருவப்படத்தை ஒட்டுவதற்காக பா.ஜ. ஓமலூர் ஒன்றிய தலைவர் சேதுபதி, மாவட்ட துணைத்தலைவர் அருண்செல்வம், கருப்பூர் ஒன்றிய தலைவர் ஜெயலட்சுமி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் வந்தனர். 

இதனை அறிந்த தி.மு.க. கவுன்சிலர் வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரகாஷ் மற்றும் தி.மு.க.வினர் அண்ணாமலை உருவப்படத்தை ஒட்டுவதற்கு தயாராக இருந்தனர். 2 கட்சியினரும் திரண்டு வருவதை கண்டவுடன், அரசு மதுபான கடை கதவை ஊழியர்கள் உள்பக்கமாக பூட்டினர். அங்கு பா.ஜ.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் மோதல் உருவானது. ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். 

முதல்வர் உருவப்படத்தை தி.மு.க.வினர் பிடுங்கியதால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.வினர் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து பா.ஜ.வினரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

இதேபோன்று பெரமச்சூர், தொளசம்பட்டி, காடையாம்பட்டி, டேனீஷ்பேட்டை ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு முதல்வர் உருவப்படத்தை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலூர் பஸ் நிலையம் அரசு மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.வினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.