சஹகார் பாரதி கூட்டுறவு அமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடைபெற்றது. சேலம் மரவனேரி மாதவம் அரங்கில் நடைபெற்ற மாநாட்டை மகராஷ்டிர மாநில ஆளுநர் சி. வி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்: - கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பது தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு தான் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. என்னைப் பொறுத்தவரை துணைவேந்தர்களை நியமனம் என்பது ஆளுநரின் உரிமை மற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். அதில் தேவையற்ற மாற்றங்களை செய்யக்கூடாது.
தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதற்கான முழு முதற்காரணம் தற்போதைய மாநில அரசு மத்திய அரசுக்கு புதிய மொழியாக்கத்தை கொடுத்தது தான். ஒன்றிய அரசு என்ற சொல்வதால் ஒரு வேற்றுமை உணர்வு விதைக்கிறது. இந்த புதிய மொழியாக்கம் ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் போக்கை ஏற்படுத்தி இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. மாநில அரசு, ஒன்றிய அரசு என்று சொல்வதை கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொன்னால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் சொல்ல நேரிடும். மத்திய அரசு, திட்டங்களுக்கு நிதி தருவதில்லை என முதல்வர் ஸ்டாலின் பொதுவாக சொல்லக்கூடாது. எந்தெந்த திட்டங்களுக்கு நிதி தரவில்லை என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறினார்.