சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் கடைகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி குட்கா விற்பனை செய்யும் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 2 ஆயிரத்து 352 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது. அதில், 136 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 251 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 136 கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்து அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.