ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் சோதனை செய்ய சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் வாசுதேவன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களில் டிக்கெட் சோதனை நடத்தினர். கடந்த மாதத்தில் நடத்திய சோதனையில், டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் ஓடி பயணம் செய்தவர்கள், பொதுப்பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பார்சல் கொண்டு வந்தவர்கள் என ரெயில்களில் விதிகளை மீறியதாக 27 ஆயிரத்து 211 பேர் சிக்கினர்.
இவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்து ரூ. 2 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரத்து 783 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும்போது, சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த மாதத்தில் நடத்திய சோதனையின்போது ரெயில்களில் விதிகளை மீறியவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. ரெயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும் என்றனர்.