சேலத்தில் சிறுபாசன ஏரிகளை புனரமைப்பு செய்வது குறித்து நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்தரங்கு நேற்று (டிச.24) நடந்தது.
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த கண்காட்சியை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார். தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் மழைக்காலங்களில் பெருகிய நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் மாவட்டங்களில் உள்ள சிறுபாசன ஏரிகளை அவற்றின் முழு நீர்ப்பிடிப்பு கொள்ளளவை உறுதி செய்வது குறித்தும், நீர் நிலைகளில் உபரிநீர் வெளியேற்றம் மற்றும் உடைப்புகள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேன்மேலும் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: குடிநீர் மற்றும் வேளாண் தேவைகளுக்கான தண்ணீர் சேமிப்பை முறைப்படுத்தி குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வதுடன் விவசாய உற்பத்தி திறன் மற்றும் பாசன பரப்பை அதிகரிக்கச் செய்திட வேண்டும். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 192 சிறு பாசன ஏரிகளில் 98 ஏரிகள் தற்போது வரை மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 சிறு பாசன ஏரிகளை சீரமைத்திட அரசாணை வெளியிடப்பட்டு ரூ. 96.11 லட்சம் நிதி தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கலெக்டர் பிருந்தா தேவி பேசினார்