சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆண்டுதோறும் காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாரின் குழந்தைகளுக்கும், பொதுமக்களின் குழந்தைகளுக்கும் கோடைகால விளையாட்டு பயிற்சி ஒரு மாதம் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த மாதம் 1-ஆம் தேதி குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான குழுவினர் 150 மாணவ, மாணவிகளுக்கு தடகளம், யோகா, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், கராத்தே, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தனர். ஒரு மாத காலத்திற்கு நடந்த இந்த பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் நிறைவு விழா ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதையொட்டி பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், சிலம்பம், ஜிம்னாஸ்டிக் போட்டிகளும், அவர்களின் பெற்றோர்களுக்கு ஆண், பெண் என இரு பிரிவில் குண்டு எறிதல் போட்டியும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் ராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினர். மேலும், மாணவ, மாணவிகள் ஜிம்னாஸ்டிக் மற்றும் சிலம்பம் ஆடி திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.