சேலம் அருகே உள்ள வீராணம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கவிராஜன். அவருடைய மனைவி அமுதா (வயது 36). இவர் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் அங்கிருந்த சாக்கடைக் கால்வாயில் குப்பை கொட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவகுமார் (53), அவருடைய மனைவி செல்வி, மாமியார் தனம், மனைவியின் தம்பி சதீஷ்குமார் ஆகியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அமுதாவிற்கும், சிவகுமார் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவகுமார் உள்பட 4 பேரும் அமுதாவைத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அமுதா பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக வீராணம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிவகுமார், செல்வி, தனம், சதீஷ்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிவகுமாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புகழேந்தி தீர்ப்பு கூறினார். செல்வி, தனம், சதீஷ்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.