சேலம் கலெக்டர் ஆபிசில் கண்காணிப்பு குழுக்கூட்டம்

57பார்த்தது
சேலம் கலெக்டர் ஆபிசில் கண்காணிப்பு குழுக்கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: - தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் என்னும் தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவ, மாணவிகள் கல்லூரியில் அதிகளவில் சேர்க்கை நடைபெறுகிறது. 

புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் தற்போது வரை 21,151 மாணவிகளும், அதேபோல் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் தற்போது வரை 14,808 மாணவர்களும் என 35,959 மாணவ, மாணவிகள் இத்திட்டங்களின் மூலம் உதவித்தொகை பெற்று பயன்பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.