சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி அருகே உள்ள பால குட்டப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கான புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ. 2.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அதற்கான பணிகளைத் துவக்கி வைத்தார்.
இதனிடையே இன்று கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை செய்து துவக்கி வைக்க சேலம் மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் நேரில் சென்று கட்டிடத்திற்குப் பூமி பூஜையைத் துவக்கினார். அப்போது அங்கிருந்த திமுகவினர் பள்ளிக் கட்டிடத்திற்கான பூமி பூஜையை அமைச்சர் ஏற்கனவே துவக்கி வைத்து விட்டார் எனக்கூறி ரகளையில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. பின்னர் திமுகவினர் சட்டப்பேரவை உறுப்பினர் அருளைத் தள்ளிவிட்டு தாக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தடுத்த பாமகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தனது தொகுதியில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்குச் சென்ற சட்டப்பேரவை உறுப்பினரைத் திமுகவினர் தடுத்து நிறுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.