சேலம் குமரகிரி ஏரியில் தொழிலாளி பிணம்

51பார்த்தது
சேலம் குமரகிரி ஏரியில் தொழிலாளி பிணம்
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள குமரகிரி ஏரியில் நேற்று காலை சுமார் 46 வயதுடைய ஆண் ஒருவரின் உடல் மிதந்தது. இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஏரியில் மிதந்த உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அம்மாபேட்டை விவேகானந்தர் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் பழனியப்பன் (வயது 46) என்பது தெரியவந்தது. திருமணமாகாத இவர் குப்பைகளை சேகரிக்கும் தொழில் செய்ததுடன் ஏரி பகுதியிலே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் பழனியப்பன் ஏரிக்குள் தவறி விழுந்து இறந்தாரா?, அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி