டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு கார் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்பேரில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா என கண்காணிக்கின்றனர். கருப்பூர், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடிகளிலும் நேற்று இரவு முழுவதும் வாகன தணிக்கை நடைபெற்றது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களிலும், கோவை, கேரளா செல்லும் ரயில்களிலும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.