சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் 152 விற்பனையாளர்கள் மற்றும் 10 கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு அழகாபுரம் போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய கூடத்தில் நேற்று(நவம்பர் 28) தொடங்கியது. இதில் விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பிளஸ்-2 வரை தகுதியுடைய இந்த பணிக்கு பட்டதாரி வாலிபர்கள் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். காலையில் 750 பேருக்கும், மதியத்திற்கு பிறகு 750 பேருக்கும் என நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த பணியில் கூட்டுறவுத்துறை சார்பில் சுமார் 150 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த நேர்முக தேர்வை மண்டல இணைப்பதிவாளர் (பொறுப்பு) அருளரசு பார்வையிட்டார். அடுத்த மாதம் 7-ம் தேதி வரை இந்த நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.