சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை உறுதித்திட்டத்தின் மூலம் தரவேண்டிய ரூ.4,034 கோடியை வழங்காத பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நாளை (சனிக்கிழமை) தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டமானது நங்கவள்ளியில் எனது (டி.எம். செல்வகணபதி) தலைமையில் நடக்கிறது. இதேபோல் சூரப்பள்ளி ஊராட்சி தபால் நிலையம் மற்றும் கோனூர் ஊராட்சி தபால் நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சங்ககிரி ஒன்றியத்தில் தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி கிடையூர் மற்றும் கோனேரிப்பட்டி ஊராட்சி காவேரிப்பட்டியிலும், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் கோரணம்பட்டி ஊராட்சி மூலப்பாதை மற்றும் வெள்ளாளபுரம் ஊராட்சியிலும், தாரமங்கலம் பாப்பாம்பாடி ஊராட்சி சந்தை திடலிலும், எடப்பாடி ஒன்றியம் உள்பட பல்வேறு இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.